ஒரு சிலர் மணலை கயிறாக திரிக்கும் வல்லமை கொண்டிருக்கின்றார்கள். சிலர் மணலை கண்கொண்டு எண்ணிப்பார்க்கும் வல்லமை கொண்டிருக்கின்றார்கள். சிலர் கற்றது கை மண்ணளவு என்று மணலை உதாரணம் கட்டுகிறார்கள்.
என் பதின் கீழ் வயதுகளில் புதிதாக வீடு கட்டும் தளத்தின் முன் திடீரென முளைத்த மணல் குன்று என் மனதை உவகை கொள்ளச்செய்யும். தூரத்திலிருந்து ஓடி வந்து குதித்து மலை உச்சி அடைவது போல அந்த மணல் குன்றின் மேலே விளையாட மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அது பூராவும் ஆற்று மணல். எப்போதும் ஈரமாக இருப்பது போல தோன்றும். அதில் அவ்வப்போது காணப்படும் சிறிய வகை சங்கு, முதலியன மணலை இன்னும் அழகு படுத்துவதாக அமையும். பொழுதுபோக்காக அழகான என் எதிர்கால வேடும், கோட்டைகளும், அதை சுற்றிய அகழிகளும் கட்டி மகிந்து கடந்த நாட்கள் இன்னும் மனதில் ஈரமாக இருக்கிறது. கீழே விழுந்து காயம் பெற்றால் கூட மணலை அந்த காயத்தின் மீது கொட்டி வைத்து பெரும் மணலை தட்டிவிட்டு அடுத்த நடவடிக்கைகளில் இறங்குவது வாடிக்கை.
என் பள்ளி மிகப்பெரிய விளையாட்டு மைதானம் கொண்டதல்ல, ஆனாலும் பரந்த மணல் வெளி நன்றாக இருக்கும். அங்கே ஓரத்தில் விழா மேடை இருக்கும், அங்கே படிகளின் அருகே சில செங்கல்கள் உடைந்து வித்தியாசமாக தோன்றும். நான் என் அதிகாலை வேளையில், பள்ளி துவங்கும் நேரத்திற்கு முன்னே அங்கே சென்று, கைகளில் கொஞ்சம் மணலை எடுத்து அந்த உடைந்த செங்கல்களின் மேலே கொட்டி, சிறுது சிறிதாக கீழே தள்ளிவிட, ஆஹா, குற்றால அருவி எல்லாம் தோற்றுப்போய்விடும், என்ன அழகாக மணல் கீழே விழும் தெரியுமா? இப்படி ஒரு அற்புதம் எங்கே இருக்க யாருமே இதை காணவோ , நிகழ்த்தவோ ஏன் செய்வதில்லை என்று கவலை பட்டிருக்கிறேன். அந்த வயதில் கூட.
கடல் மண் சற்று வித்தியாசம் கொண்டது. காலை வைத்தால் கவர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது. ஏனடா இந்த கடற்கரைக்கு வந்தோம் என்று சில நேரம் சலிப்புற வைக்கும். ஆனால் ஆற்று மணலுக்கு ஈரத்தை கிரகித்து கொள்ளும் தன்மை அதிகம் என்றே தோன்றும். மனித கலாச்சாரங்களோடு ஆற்றுக்கு தானே தொடர்பு அதிகம்.
இங்கே உக்ரைன் நாட்டை சார்ந்த செனியா சிமொனோவா என்ற பெண் மனை கொண்டு கயிறு திரிக்காமல் அழகான ஓவியமும் அதன் வாயிலாக ஒரு காட்சியும், கதையும் நிகழ்த்தி காட்டுகிறார். இப்படி ஒரு ஆர்வமும், கலை திறமையும் மிக அற்புதம். என் முன்னோர்கள் மணலில் அ. ஆ. எழுத பழகியதாக சொல்ல கேட்டிருக்கிறேன். இது போன்ற ஓவியத்தை ஏன் பழக முற்படவில்லை?
சரி, நீங்களே பாருங்கள்...
செனியா சிமொனோவா - மணலில் அற்புதம்
No comments:
Post a Comment