இந்த வாரங்களிலிருந்து ஒவ்வொரு புதிய வருங்கால கனவுகளோடும் மாணவ, மாணவியர்கள் களம் இறங்குகின்றனர். வாழ்த்துகள்.
களம் எப்படி இருக்கிறது?
உலகமே பாராட்டும் கல்வி முறை நம்மிடம் உள்ளது. பாடத்திட்டமும் மாற்றமும், ஏற்றமும் கண்டவண்ணமே உள்ளது. ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு கல்வித்திட்ட பறிமாறுதல். ஒரு ஆசிரியர் ஒன்றை தெளிவாக காட்டுதல் போல வேறு யாராலும் இயலாது.
ஆனால் தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களும் செய்தித்தாள் மூலமாக அழைத்துக் கொண்டே இருக்கின்றன, மாணவர்களை அல்ல, ஆசிரியர்களை. எந்த துறை சார்ந்த கற்பித்தலுக்கும் ஆசிரியர்கள் இல்லை. இதிலே ஏற்(கனவே) பணியிட ஆசிரியர்கள் பற்றாக்குறை வேறு உள்ளது.
தன் பணியிடங்களில் ஆசிரியர்கள் அறிந்து கொள்ளவேண்டிய சில...
உலகின் முன்னணி தொழில் நுட்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஏகாந்த சிறையை ஏற்படுத்தியுள்ளது. வயதும், முன் அநுபவங்களும், முதுமையும் கூட கவனிப்பாரின்றி, புழக்கடையாகப் போகிறது. ஒரு கைபேசியின் புதிய நுட்பத்தை அறியமுற்படும் ஆர்வமும், அக்கறையும் மனிதனை, மனதை அறிந்து கொள்ளுதலில் இருப்பதேயில்லை. இந்த வகையான மனப்போக்கு இக்கால இளம் பருவத்தினரிடம் நிறையவே இருக்கிறது.
எனவே ஆசிரியர்கள் தங்களை இது போதும் என்ற நினைவிலிருந்து உடனே கடந்தாக வேண்டும். அடுத்து என்ன, என்ன என்ற ஆர்வத்தோடு நிகழ் விசயங்களை, நுட்பங்களை அறியவேண்டும்.
ஆனால் ஆசிரியர்கள் சிலர் மாணவ, மாணவியர்களை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் அடுத்த நிலைக்கு அனுப்புவதோடு சரி. தன்னை அடுத்த நிலைக்கு மாற்றவோ, ஒவ்வோரு புதிய அணுகுமுறையை தரவோ ஆர்வமின்றி உள்ளனர். மாற்றங்களை பெற அன்போடு வாழ்த்துகிறேன்.
காரணம்... மிக சமீபத்திய மாணவ, மாணவியர்கள் பொதுவாக அதீத அல்லது அவசர புரிந்து கொள்ளுதலில் இருப்பது கொஞ்சம் பிரச்சனையை உருவாக்கலாம்.. ஒரு ஆசிரியனாக நான் பெற்ற சில கற்றுக்கொள்ளல்களில் இதை கண்டிருக்கிறேன். ஒரு நூறு விசயங்களில் ஒன்றை தெரிவிக்காததாலோ, விளக்கித்தராததாலோ இவருக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றும், இவராலேயே என் கல்வி கப்பல் கவிழ்ந்து விடும் என்று மேலிடத்தில் பற்றவைத்து விடுகின்றனர். பிறகு நாம் நம் கைகளை பிசைந்து கொண்டிருக்கவேண்டியதுதான்.
குறிப்பாக உங்கள் மாணவர்களை விடவும் அதீத அறிவு கொண்டிருத்தலும், ஏதேனும் அறியாதிருந்தால் நாளைக்கு இதைப்பற்றி விவரிக்கிறேன் என்பதாகச் சொல்லிவிட்டு அதுபோலவே விளக்கம் தேடி தந்துவிடுதல் நலம்.
No comments:
Post a Comment