நேற்று மூன்று மணிமுதல் ஆறு மணிவரையிலான ஓய்வு கிடைத்தது. உடனே திருவானைக்கா செல்ல முடிவெடுத்தேன். அவ்வப்பொழுது அப்பனைப்பார்த்து 'ஹாய்' கடந்த ஆறுமாத காலமாக நாங்கள் சந்தித்துக்கொள்ளவில்லை. அவ்வளவு பிஸியாக அப்பன் அலைக்கழித்திருந்தார்.
இருபது நிமிட பேருந்து பயணம். (இருக்கையில்லாமல் பத்து, இருக்கையோடு பத்து.) அதென்னவோ... வேகமாக காவிரி பாலத்தின் மேலான பயணம் மிகுந்த குதூகலம்தான்... முதன் முதலாக கண்ட நாள் முதல்... (தற்பொழுது வறண்ட காவிரி)
முன்னெல்லாம் தினம் காவிரி பாலத்தின் மையப்பகுதியில் வீசியடிக்கும் காற்றில் ஒரு மணிநேரம் என் மனதை பறக்க விட்டு, அன்றைய நாளின் பரபரப்பை உதறி விட்டு இல்லம் திரும்புவேன்... இப்பொழுது என் இல்லம், வெகு தெற்கே வந்துவிட்டதால் ஏதோ ஒரு நாளில் மட்டுமே...
காவிரி பாலத்தின் மையப்பகுதி, கனரக வாகனங்கள் கடந்து செல்லும் போது லேசாக குதிப்பது போல் இருக்கும்... பயமாகவும்... அநுபவமாகவும் இருக்கும்...
சனி, ஞாயிறு மாலை கூட்டம்... ஜோடி அதிகமிருக்கும்... தனியாளுக்கும் நல்ல பொழுதுபோக்கு... இரவுக்கு மேல்... இந்த பக்கம் திருச்சி காவல்துறையினரும், அந்த பக்கம் திருவரங்கம் காவல்துறையினரும், விரட்டுவர்... 'போ... வீடு போய் சேர்'...
பேக் டு த திருவானைக்கா...
நடைபாதைக்கடைகளில்லா பளிச் கோவில் தெரு... நடுவே காந்தி மண்டபம்... ஆறு நிலை கோபுரம் கடந்து செல்கிறேன்... ஒருமுறை நானும், நண்பரும் இதே இடத்தை கடக்கும் நேரம் அவர் கேட்டார்... 'ஏன்ப்பா... முன்னொரு காலத்திலே இங்கே இரண்டு காவலாளிகள் கையில் வேல் கம்புகளோடு... 'நீ சைவனா, வைணவனா... சைவனா இருந்தா உள்ளபோ!... இல்லைனா... அப்படியே திரும்பிடு' என்று கேட்டபிறகே நம்மை அனுமதிப்பார்கள் இல்லையா' என்றார்...
இங்கிருந்து மிக அருகில் தான் திருவரங்கம்... நீங்கள் சற்று உயரமானவரென்றால் திருவரங்கம் கோபுர தரிசனம் திருவானைக்காலிலேயே காண இயலும்.
இலவச பாதணி பாதுகாப்பு... (அம்மாவின் அன்பு பரிசு) உள்ளே, உடனே குளுமை... பாதங்கள் குளிர்ந்தன... சற்றே வெளியூர் பயணிகள்... எதிரே தோளில் கைகள் போட்டபடி அதிகபட்ச அலங்காரத்தில் பெண்கள்... அட... திருநங்கைகள்... குரல்மட்டும் கேளாதிருந்தால் தெரிந்திருக்காது.
அப்பொழுது மேலும் சில திருநங்கைகள்... ஜீன்ஸ், சட்டையில்... கலக்கிவிட்டார் போங்கள்... ப்ஃளாஷ்பேக்... ஒரே ஒரு திருநங்கையிடம் நான் கேட்டேன்...
'பெண்களே ஆண்களுக்குரிய ஆடைகளுடன் உலவும் காலமிது... நீங்களும் வழக்கமான ஆடைகளை தவிர்த்தால், பொதுமக்களின் பார்வையும் மாறுமல்லவா?'
'மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது'
ஒரு ஆள் திடீரென உள்புகுந்து...
'என்னங்கடீ... உங்களயெல்லாம் எங்ஙகனயோ பாத்தாப்பல இருக்கு....'
'ஆமா... மெரினா பீச்சுல பாத்த... பாம்பே சவுக்ல பாத்த... யே... போப்பா...'
வித்தியாச பார்வை எப்பொழுது மாறுமோ?...
நல்ல தரிசனம்... ஐயா... பேக் டு த திருவானைக்கா... சிவ தரிசனம்...
தீபத்தின் ஒளியில் மட்டுமே இறைவனை காண்பது மிகச்சிறப்பு... அது போலவே... அகிலாண்ட ஈஸ்வரி திரு தரிசனமும்...
வெளிச்சுற்றில் சுவரில் செதுக்கியிருந்த எழுத்துக்கள் படிக்கத்தூண்டின... நான் அதைக்கடந்து... இந்த எழுத்தை செதுக்கிச்சென்ற சிற்பியின் மனோநிலை அறிய விரும்பினேன்...
ஒரே நிசப்தம்... அந்த எழுத்துக்களை வருடிய போது மனம் மகிழ்ந்தது...
விவரிக்க இயலா... அற்புதம்...
.
Post Comment