இது எந்த வயதில் ஆரம்பிக்கிறது?
அது ஒரு பேருந்து நிறுத்தம். நான் கல்லூரி செல்லும் பேருந்துக்காக நிற்கிறேன். என் அருகில் இரு சிறார்கள்.(ஆ இல்லையா என்பதை பிறகு முடிவு செய்தால் சிறப்பு). ஒருவனை விட ஒருவனுக்கு இரண்டு, மூன்று வருட வயது வித்தியாசம், வயது பத்தும், ஏழும் இருக்கலாம். பத்து வயதுடையவனுடைய(!) முகம் சிறுத்(தை)து, அதீத கண்காணிப்பு கொண்ட கண்களோடு கல்லெறிந்த குளத்துநீர் கலக்கத்தோடும் அதிர்வுளோடும் முகத்தில் தகப்பனை(?) உருவகித்திருந்தான். இன்னொருவனுக்கோ கல்லெறியாத குளத்துநீர் போல அமைதியான முகம் (அம்மாவோட முகமோ?.) இவன் எது சொன்னாலும் அவன்...
'அப்படி இல்லடா, ஃபூல்', 'இப்படித்தான்டா ஃபூல்' என்று மறுதலளித்தவாறே வந்தான்.
நான் இருபது நிமிடம் முன்னதாகவே பேருந்து நிறுத்தம் வந்து விடுவதால் இது போல சில நிகழ்வுகள் காணக்கிடைக்கும். (நான் ஏறிச் செல்லுகிற பேருந்துக்கு சரியான நேரமே கிடையாது. முன்னதாகவும், சரியாகவும், தாமதமாகவும் வரலாம், வராமலுமிருக்கலாம்.)
'டேய், தள்ளி நில்லுங்கடா' குரல் கவனம் கலைத்தது.
பேருந்து நிறுத்தம் அருகிலிருந்த பெட்டிகடைக்காரர், நான் நடைபாதையின் மேலே நின்றிருந்தபடியால் அது என்னை குறித்ததல்ல. தினமும் என்னை பார்ப்பதனாலும் இப்படிச் சொல்ல வாய்ப்பில்லை. திறந்த கடையின் வாசல்(?) குப்பையை விலக்கியபடி (ஆமா, விளக்குமாறா, விலக்குமாறா? விளக்கம் வேண்டுமே) சொன்னார்.
அந்த பெரிய சிறுவன்(ர்) முறைத்த பார்வையை பெட்டிகடைக்காரர் கவனித்து விட்டார்.
'டேய், என்னடா பார்க்கிற' பெட்டிகடைக்காரர் கொஞ்சம் இறங்கிவிட்டார் போல.
'வாசல் கூட்றேன்ல, மேல நின்னா என்னடா?'
'ஏன், இது உங்க ரோடா? இது கார்பரேசன் ரோடு'
'டேய், ரொம்ப பேசாத'
'பப்லு, வேணான்டா'
'நீ சும்மாயிருடா, ஃபூல்'
பெட்டிகடைக்காரர் வியந்த முகத்தோடு என்னை பார்த்தார், நான் மெலிதாக புன்னகைத்தேன்.
'பாருங்க சார், எப்படி பேசுறான் பாருங்க'
அந்த பெரிய சிறுவன்(ர்) இப்போது என்னை பார்த்தான்(ர்).
நான் மீண்டும் மெலிதாக புன்னகைத்தேன்.
'ம், ஊரு ரொம்ப கெட்டு போச்சு சார்' வாசலில் நீர் தெளித்தபடி பெட்டிகடைக்காரர்.
அந்த பெரிய சிறுவன்(ர்) உர்ர் என்றிருந்தான்.
தெளிக்கும் நீர் அவன் மேல் பட்டுவிட கூடாது அவரிருக்க, பட்டா தெரியும் சேதி என்று அவனிருந்தான். நல்ல வேளையாக பேருந்து வர, ஏறிக்கொண்டோம். மூன்று நிறுத்தங்கள் வரை 'ஃபூல்' ஒலித்துக்கொண்டிருந்தது.
No comments:
Post a Comment