Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Saturday, July 23, 2011

Kovai Kalaimagal College of Arts and Science _ Part 1



கடந்த வெள்ளியன்று ஃபேஸ்புக் மூலமாக ஒரு மாணவர், கீர்த்தி அறிமுகமானார். எங்கள் கல்லூரியில் நிகழவிருக்கும் Innovative Technocracy- 2011 விழாவில் நீங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன். அழைப்பை ஏற்பீர்களா? என்று கேட்டார்.

அடுத்த சில மணிகளில் நான் அந்த மாணவருக்கு “நல்லது, மேலும் விபரங்கள் கிடைத்தால் இது பற்றி யோசிக்கலாம்” என்று பதிலளித்தேன்... உடனே அந்த மாணவர் ச்சாட்டில் வந்து விபரங்களை தந்தார்.

கல்லூரியின் பெயர் - கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
விழா - (IT)தொலைத்தொடர்புத்துறை மாணவ, மாணவியருக்கான மன்றம் துவக்கவிழா
நேரம் - காலை 10.00 மணி
இடம் - கோவை நரசிபுரம்
நாள் - 21 ஜூலை 2011



திங்களன்று அந்த கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரிதுறையின் தொலைத்தொடர்புத்துறை தலைவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் எனது வருகையை கேட்டு உறுதி செய்து கொண்டு,

“என்ன தலைப்பில் பேச விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.

“நீங்கள் ஏதேனும் யோசித்திருக்கிறீர்களா?” என்று மறு கேள்வி கேட்டேன்...

“இல்லை. நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். பொதுவாக மாணர்களுக்கான தன்னப்பிக்கை தொடர்பான விசயமாக இருந்தால் போதுமானது”

“ நல்லது. நான் ஏற்கனவே ஒன்று யோசித்திருக்கிறேன். அது
“ Opportunity from Unknown" ”

“இந்த தலைப்பை விளக்க முடியுமா?”

“தாராளமாக... இன்றைய உலகில் மாணவர்கள் ஏற்கனவே பார்த்த உலகம் வேறு, பார்த்துக்கொண்டிருக்கிற உலகம் வேறு, பார்க்கப்போகிற உலகம் வேறு அப்படியான உலகில், அவர்களுக்கு முகம் தெரியாத, அறிமுகமில்லாத பிறரிடமிருந்து தான், அவர்களின் வாழ்க்கை தொடங்கும். எனவே அதற்கான விபரங்களை Opportunity from Unknown தலைப்பில் நான் தர விரும்புகிறேன்.”

“சரி. அடுத்து உங்களைப்பற்றிய விபரங்களை எனக்கு மின்னஞ்சல் தாருங்கள்”


அன்று மாலை என்னைப்பற்றிய விபர அறிக்கை தந்து விட்டேன். மீண்டும் புதன் கிழமை, நிகழ்ச்சி உறுதி செய்து... நிகழ்ச்சியின் நேரம், நான் கோவை வரும் நேரம், அங்கிருந்து கல்லூரி வருவதற்கான வழிமுறைகள் எல்லாம் துறைத்தலைவர் தெரிவித்தார்.

Opportunity from Unknown தலைப்பில் பேச, இருபத்திநான்கு பிரிவுகள் கொண்ட ஒரு அறிக்கையை தயார் செய்தபடி எப்படி, என்ன மாதிரியான் விபரங்களை தர வேண்டும் என்று மனதிற்குள் யோசனை செய்தபடி ஒரு தாளில் அறிக்கையாக தயார் செய்துகொண்டு , Googleல் கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி தொடர்பான விபரங்களை சேகரிக்க தொடங்கினேன்.

கல்லூரியின் ஆலோசகர்
கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியின் வலைத்தளம் மிக அருமையாக நெய்யப்பட்டிருந்தது. ஒரு சேலை மிக நேர்த்தியாக இருக்கிறதென்றால் அதில் மூன்று விஷயங்கள் இருக்கும்... நல்ல வடிவம், கடின உழைப்பு, விலை. நானும் கணிணி வடிவமைப்பு துறை என்பதால் அதன் நேர்த்தி கல்லூரி பற்றிய எண்ணங்களை தரம் உயர்த்தியது.
கல்லூரி தலைவர்
இதனொடு Google Maps ல் கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியின் இடம், கோவையிலிருந்து எவ்வளவு தூரம்? காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து எவ்வளவு நேரத்தில் சென்று வரலாம் என்பதையும் அறிந்து கொண்டேன். வரைபடத்தில் பார்க்கும் பொழுதே... அந்த மேற்கு மலைச்சாரல் ஓரம் என் மனதை சந்தோசப்படுத்தியது. மிக அருகிலே தெரிந்த அனைக்கட்டி மலைத்தொடர். அதை தொடந்து கீழே கேரள மாநிலத்தின் மலையோரம், ஆழப்புழை அணை எனக்கு பல யோசனைகளை வரவழைத்தது...



கல்லூரி முதல்வர்
20ம் தேதி இரவு Opportunity from Unknown தலைப்பில் பேச என்னை தயார் படுத்திக்கொள்ள தலைப்புகளை மீண்டும் வாசித்து மனதில் பதித்துக்கொண்டேன். பயணத்திற்கான சில ஏற்பாடுகளை மனையாளின் உதவியோடு செய்து விட்டு,  சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு அதிகாலை 3.30 மணிக்கு, இல்லத்திலிருந்து, திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் சென்றேன். ஒரு கோவை பேருந்து மணி 4.10 க்கு புறப்பட தயார் ஆன நிலையில் அதி ஏறி அமர்ந்தேன். அந்த நேரத்திலும் எல்லா இருக்கைகளிலும் அமர்ந்த படிக்கு ஓரளவு கூட்டம் இருந்தது. நான் 3 நபர்களுக்கான இருக்கையில், சன்னலோரத்தில் அமர்ந்தேன்.

4.20க்கு கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரிக்கான என் பயணம் தொடங்கியது.

தொடரும்...

Post Comment

No comments: