என் அலுவல் தொடர்பான நண்பரை சந்திக்க என் இரு சக்கரவாகனத்தில் (வழக்கமாக சைக்கிள், அதனால்தான் நிறைய நிறைவுகளும், 'எப்படிய்யா, உடம்பை அப்படியே வச்சுருக்க?' ) சென்றேன். அந்த வழியிலேயே அவரை பார்த்துவிட்டேன்...
'ஐயா, உங்களை பார்ப்பதற்காகத்தான் இவ்வளவு தூரம். உங்கள் புதிய அலுவலம் எனக்குத் தெரியாது.'
'வாங்க போலாம்'
எனக்குள் யோசனை... சைக்கிளை இங்கே நிறுத்திவிட்டு அவரோடு போகலாமா?... ஆனால் திரும்ப நடந்தல்லவா வரவேண்டியிருக்கும்?...
'சரி, நீங்க போங்க, தொடர்ந்து வருகிறேன்'
எனக்காக கொஞ்சம் மெதுவாகவே முன் சென்றார். கிளம்பிச் சென்றதிலிருந்து இரு நிமிடம்...
'சடக்'
நான் விழப்போகிறேன். இதோ, விழுந்தேன்... இவ்வளவு நெருக்கமாக, அருகில், நான் சாலையை பார்த்ததில்லை. என் மீது சைக்கிளா? சைக்கிள் மீது நானா? உடனே அறிந்தபாடில்லை.
முகத்தின் இடப்பக்கம் எரிச்சல்...கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது. அதில் சிறு கற்களும், மணலும் அப்பியிருப்பதை உணரமுடிந்தது. உதட்டின் வழியாக உவர்ப்புச்சுவை. மங்கலான காட்சிகள்...
யார், யாரோ என் தோள் பற்றி தூக்கி நிறுத்துகிறார்கள். என் அலுவல் தொடர்பான நண்பரும் அருகே. யாரோ கீழே இருந்த என் பணத்தை எடுத்துத்தருகிறார். என் கண் கண்ணாடியும் அவ்வழியே கிடைக்கிறது. ஆனால் அணிய தோதாக இல்லை. நெளிந்திருக்கிறது. என் செல்போனும் கிடைத்தது. இதற்கிடையே நான் நண்பரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்...
'சாரி... பிரேக் எதோ பிரச்சனை ஆகிடுச்சு போல..'
'இல்லங்க... சைக்கிள் முன் சக்கர கவர் கழன்று விட்டது, அதான்...'
என் முகத்தில் இரத்தம் உணர்ந்த்தால்... கைகுட்டையால் துடைக்க அது உடனே ஈரமாயிற்று. என் கீழ் உதட்டின் காயத்தை, உள் மடித்து வைத்துக்கொண்டேன்.
அடுத்து என்ன? என் முகத்தை பார்க்கலாமா? எதில் பார்ப்பது?
'சார், அந்த டாக்டர்கிட்ட போங்க'
'யோவ், இங்கயே இருக்கும் போது, அங்க ஏன்யா? சார், நீங்க இங்க போங்க' என்று சொல்லப்பட்டது.
நான் பேசாதிருந்தேன். எங்கேயோ... இப்படியே என்னால் இல்லம் செல்ல இயலாது.
என் சைக்கிளின் சாவியும் என்னிடம் தரப்பட்டது.
'வாங்க, போகலாம்'
நனைந்த கைகுட்டையால் இடது முகத்தை மூடியவாறு மருத்துவமனை நுழைந்தோம். நான் பதற்றமின்றிருக்க, நண்பர்...
'வீட்ல இருந்து யாரையாவது வரச்சொல்லனுமா?'
நான் மறுத்தவாறு...
' இல்லை, நானே சமாளித்துக் கொள்கிறேன், மன்னித்துக் கொள்ளுங்கள், உங்கள் அலுவல் தடங்கல்களுக்கு நான் காரணமாகி விட்டேன். கையில் பணமும் எடுத்து வரவில்லை. நான் பிறகு தருகிறேன்.'
'அதை விடுங்க, நீங்க ரிலாக்சா இருங்க'
ஏற்கனவே நின்றிருந்த புற நோயாளிகளைத்தாண்டி.. (என் செல்போன் ஒலித்தது... இதுல ஒன்னும் கொறச்சலில்லை... அதை அமைதியாக்கினேன்.) உடனே உள்ளே செல்ல வழியில்லை. என் முறை வரும்வரை காத்திருந்தேன். மனம் அமைதியாக இருக்க, காயங்களால் உண்டான எரிச்சல் பதற்றத்தை ஏற்படுத்தியது.
செவிலி அழைக்க மருத்துவரின் முன் சென்றோம்.
'கொஞ்சம் நேரம் முன்னால் விழுந்திட்டேன்'
'கர்சீஃப் எடுங்க'
சிறிய பரிசோதனை...
' நத்திங் டு ஆல், பயப்படுகிறாப்போல ஏதுமில்லை, நர்ஸ், டிரஷிங் பண்ணிடுங்க..., மெடிசன் தாரேன், ஒரு மூன்று நாளில் சரியாகிடும்....'
செவிலி என் நண்பரிடம் ' இந்த மெடிசன் வாங்கிடுங்க'
நான் என் நண்பரிடம், 'தற்செயலாக நான் பணம் எதும் எடுத்துவரவில்லை...'
'ஏம்பா, நான் கேட்டேனா, நீங்க இங்கே வெயிட் பண்ணுங்க, நான் மருந்தோட வரேன்'
'சார், இப்படி ரிலாக்ஸா இங்கே உட்காருங்க.' செவிலி.
'நான் இப்போ முகம் களுவிக்கொள்ளலமா?'
'வோ, எஸ்.'
முகம் இன்னும் அதிகமாக எரிச்சல் தந்தது.
Betadine தடவும் போது நான் கேட்டேன்...
'என்னப்பா, முகம் பார்க்கிற மாதிரி இருக்கா. நான் ஏற்கனவே கொஞ்சம் சுமார்தான்.'
செவிலி சிரித்துக்கொண்டே ' சார், இதெல்லாம் ஒன்னுமே இல்லசார், இரண்டே நாள் சரி ஆகிடும்.'
நான் மறுநாளே அலுவல் சென்றேன். என் முகத்தை அருவருக்காமல் பார்த்து சகித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்.
நண்பருக்கு தகவல் அளித்து விட்டு ஆட்டோ பிடித்து இல்லம் சென்றேன். அமைதியாக இருந்த இல்லம்...
'நான் கிழே விழுந்திட்டேன்' என்று சொன்னதும் பரபரப்பானது. என் சதாரண நிலை பார்த்து பின் சகஜமான நிலைக்கு திரும்பினர்.
மறுநாள் வரை ஒரு மிதப்பான நிலையில் உடலும், மூளையும் இருந்தது (உபயம் ஊசி ) ஒரு நல்ல அனுபவம்.
ஓய்வே கிடைக்காதவனுக்கு ஓய்வு கிடைத்ததை அனுபவிக்க மனமில்லை. உடலின் முழுபலமும் இடது கை தாங்கியதின் காரணத்தால் கை அசைக்க முடியாது தூங்கி எழுந்தேன்.
வாழ்வில் சில நல்ல விசயங்களை, சில விபத்துக்களின் முலமாகவும் உணர முடிகிறது.
No comments:
Post a Comment